#DeputyCM | தமிழ்நாட்டில் இதுவரை இருந்த துணை முதலமைச்சர்கள் யார்.. யார்? - முழுவிவரம்!
தமிழ்நாடு துணை முதலமைச்சராக இதுவரை பொறுப்பு வகித்தவர்களின் பட்டியல் குறித்து விரிவாக காணலாம்.
சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உடனடியாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவைப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனிடையே, கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது. இந்தப் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில காலமாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு திமுக நிர்வாகிகள் பேசி வந்தனர். திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எஸ்.எஸ். பழனி மாணிக்கம், “உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டுங்கள்” என கோரிக்கை வைத்தார்.
பின்னர், இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்” என்று அமைச்சரவை மாற்றம் குறித்தும், உதயநிதியின் துணை முதல்வர் பதவி குறித்தும் உறுதிப்படுத்தினார். இதற்கிடையே, அமைச்சரவை மாற்றம் குறித்து நேற்று ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய மாற்றங்கள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி தற்போது வகிக்கும் துறையுடன் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தும் துறையை சேர்ந்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படுகிறது.
துணை முதலமைச்சர்கள்
கடந்த 2006 -11ம் ஆட்சிக் காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். மே 29ம் தேதி 2009ம் ஆண்டு துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2011-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி முடியும் வரை பொறுப்பில் இருந்தார். கிட்டத்தட்ட ஒரு வருடம் 351நாட்கள் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்.
கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். இதன் மூலம் ஓ.பன்னீர் செல்வம் இரண்டாவது துணை முதலமைச்சராக இருந்தார். இதன்படி 3ஆண்டுகள் 258நாட்கள் ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.