களைகட்டத் தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
உலக புகழ்ப்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே ''ஜல்லிக்கட்டு'' எனும் பாரம்பரிய விளையாட்டுடன் ஒன்றிணைந்ததான். தமிழ்நாட்டில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கள் தான் மிகவும் பிரபலமானவை. 50 ஆண்டுகளுக்கு முன்பு காளையின் கொம்புகளில் நாணயங்களான மொத்தமக சேர்த்து சல்லிக் காசுகளாக ஒரு துணியில் முடிந்து கட்டிவிடுவார்கள். காளையை அடக்குபவர்கள் அந்தக் காலையின் கொம்பில் கட்டப்பட்டு இருக்கும் சல்லிகாசை எடுத்துக் கொள்ளலாம். இதுவே பின்னாட்களில் ஜல்லிக்கட்டு என்று மறுவியதாக கூறப்படுகிறது.
அடுத்த மாதம், பொங்கல் தினத்தையோட்டி ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேட்டிலும், 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் "உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இவ்விழாவை துவக்கி வைக்க வருகை தரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது" என தெரிவித்தார்.