நுங்கம்பாக்கம் காம்தார் சாலைக்கு எஸ்.பி.பி. பெயர் - பலகையை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் கடந்த சில மாதங்களுக்கு
முன்பு எஸ்.பி.பி.யை போற்றும் வகையில், அவர் வாழ்ந்து மறைந்த அந்த சாலைக்கு, அவருடைய பெயரை வைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பி.,யை கவுரவிக்கும் விதமாக, அவர் வாழ்ந்த சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதன்மை சாலைக்கு மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயர் சூட்டப்பட்டு, அதன் பெயர் பலகையை தமிழகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, மா. சுப்ரமணியம், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், மற்றும் எஸ்.பி.பி சரண், எஸ்.பி. சைலஜா உள்ளிட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குடும்பத்தினர் பங்கேற்றனர். இந்தப் பெயர் பலகையை திறந்து வைத்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
“எஸ்பிபி பாலசுப்ரமணியம் மறைந்த சாலைக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அவர் பெயர்
சூட்டப்பட்டுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு என்பது யாரும் மறக்க முடியாத நினைவுகள், அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதுகுறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.
மணிமண்டபம் குறித்து நேரடியாக எஸ்பிபி சரணிடம் கேட்டு அது குறித்து முடிவு
செய்வோம்” என தெரிவித்தார்.