“துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு..” - தமிழ்நாடு துணை முதலமைச்சர் #UdhaiyanidhiStalin!
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. எனவும் தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உடனடியாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவைப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனிடையே, கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது. இந்தப் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
தொடர்ந்து, கடந்த சில காலமாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு திமுக நிர்வாகிகள் பேசி வந்தனர். திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எஸ்.எஸ். பழனி மாணிக்கம், “உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டுங்கள்” என கோரிக்கை வைத்தார்.
பின்னர், இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்” என்று அமைச்சரவை மாற்றம் குறித்தும், உதயநிதியின் துணை முதலமைச்சர் பதவி குறித்தும் உறுதிப்படுத்தினார். இதற்கிடையே, அமைச்சரவை மாற்றம் குறித்து நேற்று ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய மாற்றங்கள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி தற்போது வகிக்கும் துறையுடன் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தும் துறையை சேர்ந்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படுகிறது.
இந்நிலையில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கட்சித்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, பெரியார், அண்ணா, கருணாநிதி வகுத்து தந்த பாதையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில், சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.