வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை - இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு.!
மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிமீ வேகத்தில் வட-வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், ஒடிசா மாநிலம் பாரதீப்பிலிருந்து தென்-தென்கிழக்கே 550 கிமீ தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் திகாவிலிருந்துதென்-தென்மேற்கே 710 கிமீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மையம் உள்ளது.
இது வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, அது வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி 17-ம் தேதி காலை ஒடிசா கடற்கரையிலிருந்து வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையும். அதன் பின்னர் நவம்பர் 18 காலை வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையை அடையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.