வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஒடிசாவில் கரையை கடக்க வாய்ப்பு!
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை ஒடிசா கடற்கரையில் சிலிகா ஏரி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், “வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரம் மேற்கு வட மேற்கு திசையில் கடந்த 6 மணி நேரத்தில் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவின் பூரிக்கு தெற்கு தென்மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் பாரதிப்பிற்கு தென்மேற்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலத்தின் கலிங்கப்பட்டினத்தில் இருந்து 200 கிலோமீட்டர் வடகிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை ஒடிசா கடற்கரை தெற்கு பூரி பக்கத்தில் உள்ள சிலிகா ஏரி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் இடையே வலுவிழந்து உள்ளே செல்லும்” என தெரிவித்துள்ளது.