செங்கல்பட்டு ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயில் இடத்தில் வணிக வளாகம் கட்ட அனுமதி மறுப்பு - உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரத்தில் உள்ள ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி வணிக வளாகம் கட்டுவதற்கான டெண்டர் இந்து அறநிலையத்துறை சார்பில் கோரப்பட்டது.
இந்து சமய அறநிலை துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நந்திவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஒரு பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவானது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த உத்தரவு படி, இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் பிரிவுகள் 36 மற்றும் 66 இன் படி வணிக வளாகம் கட்ட எந்த ஒரு அனுமதியும் இல்லை. கோயிலில் இருந்து கிடைக்கும் உபரி நிதியை கோயில் உடைய வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். அந்த வகையில் அந்த நிதியை ஒரு வங்கியில் நிலையான வைப்புத் தொகையாக வைத்தால் அதிலிருந்து கிடைக்கும் வட்டி கோயிலின் நிர்வாகப் பணிகளுக்கு பயன் அளிக்கும். எனவே அதற்கான சாத்திய கூறுகளை இந்து சமய அறநிலையத்துறை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது.
மேலும் வணிக வளாகம் கட்டினால் அதிலிருந்து வருமானம் வருவதாக இருந்தாலும் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விஷயங்கள் படி அந்த நிலத்தை ஏழை இந்துக்களின் இலவச திருமணம் செய்வதற்கான மண்டபம், அன்னதான மண்டபம் உள்ளிட்டவை மட்டுமே கட்ட முடியும் என்பதை இந்து சமய அறநிலைய துறையின் சட்டம் தெளிவுபடுத்துகிறது.
எனவே ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயிலின் நிதி மற்றும் சொத்துக்களைப் பயன்படுத்தி வணிக வளாகம் கட்டும் இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கையை ரத்து செய்வதாக உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயிலின் நிர்வாக அதிகாரி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்து, கோயில் நிர்வாக அதிகாரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.