மருத்துவமனையில் கர்பிணிக்கு அனுமதி மறுப்பு! - ஆட்டோவில் பிறந்த குழந்தை!
மத்தியப் பிரதேசத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த நிறைமாத கர்பிணிக்கு ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கம்பளி வியாபாரியான தினேஷ் சிலாவத், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். நிறைமாத கர்பிணியாக இருந்த இவரது மனைவிக்கு கடந்த 22ம் தேதி மதியம் 2.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆட்டோ ரிக்க்ஷா மூலம் தனது மனைவியை நீமுச் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தினேஷ் அழைத்து சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்து, உதய்பூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர். இந்நிலையில், வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்பே, ஆட்டோ ரிக்க்ஷாவிலேயே குழந்தை பிறந்தது.
இதற்கிடையே, குழந்தை பிறக்கும் போது அருகில் இருந்தவர்கள் ஆட்டோ ரிக்க்ஷாவை துணியால் மறைத்து உதவினர். இதனைத் தொடர்ந்து, தாய் மற்றும் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமாக உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு – உயிருடன் மண்ணில் புதைந்த 2000 பேர்!
முன்னதாக மருத்துவமனை ஊழியர்கள் கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்தது சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், மயக்க மருந்து நிபுணர் விடுமுறையில் இருப்பதால், சிசேரியன் பிரசவம் செய்வதற்கு மருத்துவர்கள் யாரும் இல்லை என்பதாலேயே கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்ததாகத் தெரிவித்துள்ளது.