தமிழ்நாட்டில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு சற்று குறைவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் வரை டெங்கு காய்ச்சல் பாதித்துள்ள நிலையில், இந்த ஆண்டு பாதிப்பு குறைந்த நிலையில், 8,545 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்த
இடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டார்.
பின்னர் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
"தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் அதிக பாதிப்பை
சந்தித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. தரைத்தளத்தில் ஆறு முதல் ஏழு அடி உயரத்திற்கு தண்ணீர் வந்த நிலையில் அங்குள்ள கேத் லேப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய ஒரு மாத கால ஆகும். அதுவரை திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.
இதையும் படியுங்கள் : நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!
வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 2682 மருத்துவ
முகாம்கள் நடத்தப்பட்டு 95,127 நபர்களுக்கு தற்போது வரை சிகிச்சை
அளிக்கப்பட்டுள்ளது. அதில் 764 பேர் காய்ச்சல், 2565 நபர்கள் சளி உள்ளிட்ட நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ முகாமை பல நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவை தவிர 93 நடமாடும் மருத்துவ முகாம்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் சேர்த்து 190 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் ஒரு மருத்துவர் உள்ளிட்ட நான்கு மருத்துவ ஊழியர்கள் பணியில் இருப்பார்கள்.
அப்போலோ, மீனாட்சி மிஷன் உள்ளிட்ட தனியார் மருத்துவ நிறுவனங்களும் மருத்துவ முகாம்களை நாளை முதல் நடத்த உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிகிச்சை அளிக்க 50 மருத்துவர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
துணை சுகாதார நிலையங்கள் சுகாதார நிலையங்கள் என 315 இடங்களில் பாதிப்புகள்
ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் பாதிப்பு மருந்துகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. கட்டிட பாதிப்பு என பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளது. இவை அனைத்தையும் கணக்கெடுத்து உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
ஏரல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படாத
நிலையில் கூட அங்கே ஒரு சுகப்பிரசவம் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 8545 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 ஆயிரம் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில் இந்த ஆண்டு பாதிப்பு குறைந்துள்ளது.
தற்போது கேரளாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சற்று
தமிழ்நாட்டில் இருந்தாலும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகிறது"
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.