திண்டுக்கல்லில் 4 பேருக்கு #Dengue காய்ச்சல் உறுதி!
திண்டுக்கல் மாவட்டத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்தது. இதனால் ரோட்டோரங்களில், பள்ளங்களில் நீர்தேங்கி கொசு உற்பத்தியானது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய சுகாதாரத் துறை அலட்சியமாக இருந்ததால், அதிக அளவில் கொசு உற்பத்தியாகி பலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான காய்ச்சலுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். நால்வரையும் பரிசோதித்ததில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. பின்னர் டெங்கு வார்டில் நால்வரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தி, எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். தொடர்ந்து டெங்கு
குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்.