மாற்றங்களுடன் நகரும் தேமுதிக...கடந்து வந்த பாதை...!
தமிழக அரசியலில் திமுக, அதிமுக என மிகப்பெரிய கட்சிகளின் வரிசையில் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் முக்கியமான கட்சியாக மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மாற்றங்களுடன் மக்கள் பணியில் தேமுதிக ஈடுபட்டு வந்துள்ளது. நடிகராக இருந்த விஜயகாந்த் தொடங்கிய இந்த கட்சி கடந்து வந்த பாதையை காணலாம்.
கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை மதுரையில் விஜயகாந்த் தொடங்கினார். அடுத்த ஆண்டே, சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட்டது. சந்தித்த முதல் தேர்தலிலேயே 8.34% வாக்குகள் பெற்று அசத்தியது. இந்த தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தும் வெற்றி பெற்றார்.
இதையடுத்து 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. 10.1% வாக்குகள் பெற்ற தேமுதிக வாக்கு வங்கியை தக்க வைத்தது. பின்னர் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக, 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று, தேமுதிக எதிர்க்கட்சியானது. இதன்மூலம் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.
பின்னர், 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக, 14 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியை சந்தித்தது. வெறும் 5.1% வாக்குகளையே பெற்றது.
2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, மதிமுக, விசிக, தமாகா, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் ‘மக்கள் நலக் கூட்டணி’ அமைத்து போட்டியிட்டது. முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். 104 தொகுதிகளில் போட்டிட்ட தேமுதிக அனைத்திலும் தோல்வியடைந்து, 2.4% வாக்குகள் மட்டுமே பெற்றது.
இதையடுத்து, 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக மீண்டும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியையே தழுவியது. இதனிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் அரசியலிலும், மக்கள் பணியிலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
கட்சிப் பணிகளை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னெடுத்து மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், 2023-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடைபெற்ற பொதுக்குழுவில் தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது. அதன்படி தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் பதவியேற்றுக் கொண்டார்.
யார் இந்த பிரேமலதா விஜயகாந்த்?
1969-ம் ஆம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி பிறந்த பிரேமலதா விஜயகாந்த் இளங்கலை ஆங்கிலம் படித்தவர். 1990-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி நடிகர் விஜயகாந்த்தை திருமணம் செய்து கொண்டார். விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
2011 சட்டமன்ற தேர்தலின்போது, கட்சிக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி தேமுதிக கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், டிசம்பர் 14, 2023-ல் தேமுதிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.