“தேமுதிக தலைமை அலுவலகம் இனி ‘கேப்டன் ஆலயம்’ என அழைக்கப்படும்” - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு இன்று முதல் கேப்டன் ஆலயம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளையொட்டி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி பின் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பிரேமதா விஜயகாந்த், துணை பொது செயலாளர் சுதீஷ், மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோர் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தலைமை அலுவலகத்தில் குவிந்தனர்.
விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நினைவிடத்திற்கு வரும் பொதுமக்களுக்கு காலையில் இருந்தே அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, விஜயகாந்த் நினைவிடத்தில் முழு உருவச் சிலையை திறந்து வைத்து பின்னர், நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரேமலதா விஜயகாந்த்.
தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
“தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு இன்று முதல் கேப்டன் ஆலயம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. 25 லட்சம் பேருக்கு தமிழ்நாடு முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. கேப்டன் ஆலயம் என்ற youtube சேனலை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சண்முக பாண்டியன் நடித்த திரைப்படத்தின் தலைப்பு குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும்.
கேப்டனுடைய மூன்று பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழலில்லாத வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை மேம்படுத்த வேண்டும். இதுதான் விஜயகாந்தின் கனவு. ஏழை எளிய மக்களுக்கு கூட அடிப்படைத் தேவை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கம் தான். தமிழ்நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கஞ்சா, ஊழல் போன்ற பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு பக்கம் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சட்ட ஒழுங்கை சீர் செய்ய வேண்டும்.
மறைந்த விஜயகாந்தின் கனவு கொள்கையை தேமுதிகவினர் நிறைவேற்றுவார்கள். விஜயகாந்திற்கு பொது இடத்தில் மணி மண்டபம் கட்டுவது குறித்து இதுவரை அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. ஏன் திரும்ப பெறப்பட்டது என்று தெரியவில்லை. அதன் அவசியம் என்ன?
கட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. தலைமை அலுவலகத்தை பொதுமக்கள் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். விஜயகாந்த் மறைந்தது முதல் ஒவ்வொரு நொடியும் நாங்கள் பல துயரத்தை எதிர்கொள்கிறோம். விஜய் என்னை சந்தித்தது நன்றி தெரிவிக்க தான். முதலமைச்சர் வெளிநாடு பயணம் செல்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அவர் எதற்காக சென்றாலும் நன்றாக சென்று வரட்டும்.
பாஜகவும் திமுகவும் இதுவரையும் எலியும் பூணையாக இருந்தார்கள். இப்பொழுது நட்பு ரீதியாக பழகுகிறார்கள். சென்னையில் கார் பந்தயம் தேவையில்லாத ஒன்று. சென்னையில் உள்ள அனைத்து சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. கார் பந்தயம் நடத்துவதால் எதுவும் மாறப் போவதில்லை. தமிழ்நாடு போதை நாடாக மாறி உள்ளது. விஜய பிரபாகரனுக்கு தகுந்த நேரத்தில் உரிய பதவி கொடுக்கப்படும்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.