#DelhiAssemblyElection | முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி!
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : #Serbia | ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம் – அமைச்சர் உள்பட 11 பேர் கைது!
இதில், முதற்கட்டமாக 11 வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு (பிஏசி) கூட்டத்திற்குப் பிறகு பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சத்தர்பூர் தொகுதியில் பிரஹ்ம் சிங்தன்வார், பதார்பூர் தொகுதியில் ராம் சிங் நேதாஜி, லட்சுமி நகர் தொகுதியில் பிபி தியாகி, சீலாம்பூர் தொகுதியில் சவுதிரி சுபாயிர் அகமது, சீமா புரி தொகுதியில் வீர் சிங் திங்கன், ரோஹ்டாஸ் நகர் தொகுதியில் சரிதா சிங், கோண்டா தொகுதியில் கவுரவ் சர்மா, விஷ்வாஸ் நகர் தொகுதியில் தீபக் ஷிங்லா, கரவால் நகர் தொகுதியில் மனோஜ் தியாகி, கிராரி தொகுதியில் அனில் ஜா, மாடியாலா தொகுதியில் சுமேஷ் ஷோகீன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.