‘டெல்லி சலோ’ - 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு
டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஹரியானா-பஞ்சாப் எல்லையான ஷம்புவில் குவிந்த விவசாயிகள், தலைநகர் டெல்லிக்குள் நுழைய படையெடுத்து வருகின்றனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த துணை ராணுவப் படையினர் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
இதையும் மீறி உள்ளே நுழைய முயன்ற விவசாயிகளை இரும்பு தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, சுப்கரன் சிங் என்ற 23 வயது விவசாயி காயமடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 2 பேர் மாரடைப்பால் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு விவசாயி உயிரிழந்திருப்பது, டெல்லி எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதனிடையே டெல்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதனால், 2 நாட்களுக்கு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை மாலை முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.