டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் - உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பௌர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர். இதுவரைக்கும் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர்.
இதனிடையே மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ரயில்களில் பயணிக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதாலும், சில விரைவு ரயில்கள் வர தாமதமானதாலும் டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர். 9 பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒ