டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா! ஆம் ஆத்மி கட்சியிலிருந்தும் விலகினார்!
டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகிய சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தொடங்கி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் என அடுத்தடுத்து அதிரடி கைது நடந்தது.
இறுதியாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 6 மாத சட்ட போராட்டத்திற்கு பிறகு, சஞ்சய் சிங்குக்கு சமீபத்தில் பிணை கிடைத்தது. ஆனால், மணீஷ் சிசோடியாவும் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்னும் சிறையில்தான் உள்ளனர்.
ராஜ்குமார் ஆனந்தை பொறுத்தவரையில், ஆம் ஆத்மி அரசாங்கத்தில் தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். கட்சியில் இருந்து விலகியது குறித்து விளக்கம் அளித்த ராஜ்குமார் ஆனந்த், "ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்ட செயலை பார்த்த பிறகு நான் அதில் சேர்ந்தேன். இன்று, கட்சியே ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதனால்தான் விலக முடிவு செய்துள்ளேன்.
ஆம் ஆத்மி கட்சியில் தலித் எம்எல்ஏவோ, கவுன்சிலரோ இல்லை. தலித் தலைவர்கள் தலைமைப் பதவிகளில் கூட நியமிக்கப்படுவதில்லை. நான் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றுகிறேன். தலித் மக்களுக்காக என்னால் பணியாற்ற முடியவில்லை என்றால், கட்சியில் இருப்பதில் அர்த்தமில்லை" என்று ராஜ்குமார் ஆனந்த் கூறியுள்ளார்.