டெல்லி மதுபான கொள்கை வழக்கு | டெல்லி நீதிமன்றத்தில் காணொலி மூலம் கெஜ்ரிவால் ஆஜர்!
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் சம்மனை ஏற்று கெஜ்ரிவால் இன்று காணொலி மூலம் ஆஜரானார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத் துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராக கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடும்படி டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட டெல்லி கோர்ட்டு, விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு தொடர்பாக கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் இன்று காணொலி மூலம் ஆஜரானார்.
இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோரும் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மனீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதால் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
அதேபோல், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் சஞ்சய் சிங்கும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்த வழக்கில் சத்யேந்திர ஜெயினும் கோர்ட்டில் ஆஜராக உள்ளனர். ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள சத்யேந்திர ஜெயின் காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
அதேவேளை, டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கெஜ்ரிவால் கொண்டுவந்துள்ளார். தீர்மானத்தின் மீதான விவாதமும் இன்று நடைபெற உள்ளதால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.