டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் மே 31-ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2021-22-ம் ஆண்டில் டெல்லியில் புதிதாக மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதில், முறைகேடு மற்றும் பண மோசடி நடந்திருப்பதாக மத்திய புலனாய்வு நிறுவனங்கள் குற்றம்சாட்டியிருந்தன. இதனை அடுத்து டெல்லியில் புதிய மதுபான கொள்ளை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகள், ‘சவுத் க்ரூப்’ வழங்கிய ரூ.100 கோடி லஞ்சப் பணத்தில் ரூ.45 கோடி கடந்த 2022-ம் ஆண்டு கோவாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியது.
இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை கடந்த 2023, பிப்.26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. சிபிஐ வழக்கின் அடிப்படையில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறை இதே வழக்கில் மணீஷ் சிசோடியாவை 2023, மார்ச் 9-ம் தேதி கைது செய்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்.28-ம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன, உரிமைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது அல்லது குறைக்கப்பட்டது, தகுந்த அதிகாரிகளின் அனுமதியின்றி உரிமம் நீட்டிக்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் மணீஷ் சிசோடியா மீது சுமத்தப்பட்டுள்ளன. இதனிடையே, மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்வதற்காக சிசோடியா இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் தாக்கல் செய்த இந்த ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் அதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மே. 17-ம் தேதி தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்தா ஷர்மா மே 21-ம் (இன்று )தேதி ஒத்தி வைத்தார். இதனை அடுத்து இன்று 21.05.2024) நடந்த விசாரணையில் , மணீஷ் சிசோடியா சாட்சியங்களை சிதை்துள்ளார், தனது பொது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் அதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. எனவே ஜாமின் வழங்க இயலாது, மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டார்.
முன்னதாக மணீஷ் சிசோடியா மீதான நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து கீழமை நீதிமன்ற சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா மே.31-ம் தேதி நீதிமன்ற காவலை வரை நீட்டித்து உத்தரவிட்டார்.