Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடியின் வேட்புமனுவை ரத்துச் செய்யக்கோரிய வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

01:37 PM May 30, 2024 IST | Web Editor
Advertisement

பிரதமர் மோடியின் வேட்புமனுவை ரத்துச் செய்யக்கோரிய வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதனை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisement

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது.

இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது.  அதன்படி உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஒரு தொகுதியிலும் என மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட தேர்தலில் வாரணாசி தொகுதியிலும் தேர்தல் நடைபெற உள்ளதால் கடந்த மே 14ம் தேதி பாஜக தொண்டர்களோடு, மாபெரும் பேரணியாக தேர்தல் அலுவலகம் சென்ற பிரதமர் மோடி, வாரணாசி மக்களவை தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்தபோது உடன் இருந்தனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கேப்டன் தீபக் குமார் என்ற விமானி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.  அதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உண்மையான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கொண்டிருப்பேன் என்று பிரதமர் மோடி பொய்யான உறுதிமொழியைச் சமர்ப்பித்ததால் வாரணாசி தொகுதியில் அவரது வேட்புமனுவை ரத்து செய்ய வேண்டும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சச்சின் தத்தா தலைமையிலான டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.  இந்த விசாரணையில் பிரதமர் மோடி பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாகவும், தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார். மேலும் மோடி தான் தலைமை தாங்கிய விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்று தன்னை கொல்ல முயன்றதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் மனுதாரர் பிரதமருக்கு எதிராக பொறுப்பற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மனுதாரரின் நோக்கம் பிரதமர் மோடியை பற்றி அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக மட்டுமே உள்ளதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றம் கேப்டன் தீபக் குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

Tags :
Delhi high courtElection2024Narendra modiPM ModiVaranasi
Advertisement
Next Article