டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல் திடீர் நலக்குறைவு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21-ம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி ஜாமீன் வழங்கிய நிலையில், அமலாக்கத்துறை அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது.
இதனிடையே, அரவிந்த கெஜ்ரிவாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் வைத்தே சிபிஐ கைது செய்தது. இந்த நிலையில், நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
நீர்சத்துக் குறைந்ததால் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக அவர் நீதிமன்ற அறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சைக்குப்பின் அரவிந்த் கெஜ்ரிவால் இயல்பு நிலைக்கு திரும்பினார்.