டெல்லி கார் வெடி விபத்து : நாடு முழுவதும் உஷார் நிலை..!
டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்து, வெடித்து சிதறியது. இச்சம்பவம் நடைபெற்ற இடம் பிரதான மார்க்கெட் பகுதியாகும். இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.
இதனை தொடர்ந்து தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டெல்லி காவல்துறையும் சம்பவ இடத்தில் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த வெடி விபத்தில் சிக்கி தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் டெல்லி டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லி வெடி விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. சென்னை,மும்பை,கொலகத்தா போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் காவல்துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டை பொருத்த மட்டில் நெல்லை,மதுரை மற்றும் கேரள எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில்வே நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல்துறையினர் இணைந்து மோப்பநாய் உதவியுடன் ரயில்வே நிலைய சுற்று வட்டார பகுதி முழுவதிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளிலுள்ள மத்திய அரசின் அலுவலகங்கள் முழுவதுமாக காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நெல்லை தூத்துக்குடி தென்காசி ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகள் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களில் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையத்தில் போலீஸார் ரயில் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.