டெல்லி சட்டசபை தேர்தல் | பேரணியில் உரையாற்றுகிறார் ராகுல் காந்தி?
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வரும் 13ம் தேதி டெல்லியில் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வரும் 17ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். தொடர்ந்து 18ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 20-ம் தேதி ஆகும்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து டெல்லியில் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஆம் ஆத்மி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதனை தொடர்ந்து காங்கிரஸுடன் கூட்டணி இல்லை, தனித்துப் போட்டி எனவும் தெரிவித்தது.
இதற்கிடையே டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ் வாதி கட்சிகள் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வரும் 13ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.