டெல்லி விமான நிலைய விபத்து - எதிர்க்கட்சிகள் பொய் செய்திகளை பரப்புவதாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு குற்றச்சாட்டு!
டெல்லி விமான நிலைய விபத்து தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய் செய்திகளை பரப்புவதாக விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்தகனமழை காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தின் முதலாவது டெர்மினலின் மேற்கூரை நேற்று அதிகாலை 5.30 அளவில் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினரும், போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
விமான நிலைய விபத்து தொடர்பாக எதிர்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக விமான போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கிஞ்சராப்பு ராம் மோகன் நாயுடு எதிர்கட்சிகள் பொய் செய்திகளை பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் தெரிவித்ததாவது..
“ இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை. அனைத்து விமான நிலையங்களிலும் உட்கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளோம். நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலிருந்தும் 2 முதல் 5 நாட்களுக்குள் அறிக்கை கேட்டுள்ளோம், அதன் பிறகு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்..
விமான நிலைய மேற்கூரை விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணத்தை திருப்பி அளிக்கவோ அல்லது மாற்று விமானங்களை உறுதி செய்வதற்காகவோ தனி அறை அமைக்கப்பட்டுள்ளது . ஏழு நாட்களுக்குள் பணத்தைத் திரும்பப் பெறவும் அல்லது விமானங்கள் ரத்து செய்யப்பட்டவர்களுக்கு மாற்று விமானங்கள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளோம்” என விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.