டெல்லி காற்று மாசுபாடு; விரைந்து நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில் கலக்கும் நச்சுக் காற்று தற்போது மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து வருகிறது.
மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனுடன், இருமல், நரம்புத் தளர்ச்சி மற்றும் கண்களில் எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகளையும் மக்கள் சந்திக்கின்றனர்.
இந்நிலையில், டெல்லி காற்று மாசுபாடு குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபடுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
அடுத்த ஆண்டு டெல்லியில் இதே நிலை தொடரக்கூடாது என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது. காற்று மாசுபாட்டை குறைக்க வல்லுநர்கள் இருந்தும் ஏன் தீர்வு காணப்படவில்லை? என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.