டெல்லி வன்முறை வழக்கு - 9பேரை விடுதலை செய்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு.!
வடகிழக்கு டெல்லி வன்முறை வழக்கில் குற்றவாளிகள் கீழ் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட 9பேரை விடுதலை செய்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி வன்முறை சம்பவத்தின்போது, வன்முறை மற்றும் சொத்துகளை நாசப்படுத்திய வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேரை விடுதலை செய்து டெல்லியின் கர்கர்டூமா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி வன்முறை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் இருக்கும் சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு சாதகமாக்கி, 9 பேரையும் விடுதலை செய்வதாக டெல்லியின் கர்கர்டூமா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு இயற்றியது. இச்சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக கூறி, பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதுபோல, டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைதியான முறையில் தொடர் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, வடகிழக்கு டெல்லி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்குர், தேச விரோதிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பேசினார். அதனைத் தொடர்ந்து, டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மற்றும் ஷஹீன் பாக் பகுதியிலும் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் நடைபெற்று வந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் வன்முறையாக மாறியது. குறிப்பாக முஸ்லிம்களின் கடைகள் அதிக அளவில் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் 40 முஸ்லிம்கள், ஒரு காவலர் உள்பட 52 பேர் உயிரிழந்தனர். பல கோடி மதிப்பிலான பொருள்கள் நாசமாகின.
இந்த வழக்கு டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 13-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகமது ஷாநவாஸ், முகமது ஷோயப், ஷாருக், ரஷீத், ஆஸாத், அஷ்ரஃப் அலி பர்வேஸ், முகமது ஃபைசல் உள்பட 9 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில் இவர்கள் அனைவரையும் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.