டெல்லி 4 நான்கு மாடி கட்டட விபத்து - பலி எண்ணிக்கை உயர்வு!
டெல்லியில் நேற்று (ஏப்.18) கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இன்று (ஏப்.19) அதிகாலை 20 ஆண்டுகள் பழமையான நான்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டதை அடுத்து 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அம்மாநில முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் 12 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வந்தது.
இந்த நிலையில் இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பட்டியலை டெல்லி காவல்துறை பகிர்ந்துள்ளது. அதன்படி இந்த கொடூர சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.