For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Delhi | பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த 3 கோரிக்கைகள்! முழு விவரம்...

03:38 PM Sep 27, 2024 IST | Web Editor
 delhi   பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வைத்த 3 கோரிக்கைகள்  முழு விவரம்
Advertisement

டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு அளித்தார். அதில் தமிழ்நாடு நலன் சார்ந்து பல்வேறு முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டிற்கான நிதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப். 26) இரவு டெல்லி சென்றார். இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Advertisement

அதில், சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்தை செயல்படுத்த தேவையான மத்திய அரசின் நிதி, சமக்ர சிக்‌ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு ஆகிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை மெட்ரோ திட்டம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்ட பணிகளை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தின. அதேபோல், சென்னையில், 2ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ரூ.63,746 கோடி நிதி திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் இதை ஏற்றுக்கொண்டு 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டன. மத்திய நிதியமைச்சர் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று 2021-ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிவித்தார்.

இதையடுத்து, மத்திய அரசின் திட்ட முதலீட்டு வாரியம் இதற்கான ஒப்புதலை 2021ம் ஆண்டே வழங்கியது. இந்த பணிகளுக்கு ரூ.18,574 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுவரை மத்திய அமைச்சரின் ஒப்புதலும், மத்திய அரசின் ஒப்புதலும் வழங்கப்படவில்லை. ஒப்புதல் வழங்காத காரணத்தால் மத்திய அரசின் நிதி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை. இதனால், மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள் தாமதப்பட்டிருக்கிறது.

முதல்கட்ட பணிகளை முடிக்க மத்திய அரசு உறுதுணையாக நின்றது போல, இரண்டாம் கட்டப் பணிகளையும் முடிக்க உறுதுணையாக நிற்க வேண்டும். நிதி ஒதுக்காததால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணி நிறைவடையுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, பிரதமர் இந்த விஷயத்தில் தலையிட்டு, இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே 50:50 சமபங்கு பகிர்வு அடிப்படையில், கட்டம்-I க்காக செய்யப்பட்டது போல் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு முன்கூட்டியே ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஒருங்கிணைந்த கல்வி திட்டம்

ஒருங்கிணைந்த கல்வி திட்டம் 60:40 என்ற விகிதத்தில் மத்திய, மாநில அரசுகள் பங்களிப்பை செலுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கு இந்த ஆண்டு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி ரூ.2,152 கோடி. இந்த தொகையில் முதல் தவணை இதுவரை தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை. தேசிய கல்விக்கொள்ளையின் முக்கிய சாராம்சங்களை ஏற்கனவே தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது.

தேசிய கல்விக் கொள்கையை விட காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல முன்னோடி திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. எந்த மாநிலத்தின் மீது மொழி திணிப்பு இருக்காது என்று மத்திய அரசு உறுதிமொழி அளித்தாலும், இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்த ஷரத்து இல்லை. இந்த ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும்.

இந்த சூழலில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடாததை காரணம் காட்டி மத்திய அரசு நிதியை ஒதுக்கிடாததால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல், மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால், மத்திய அரசு உடனே நிதியை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 43,94,906 மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு PM SHRI புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்த முடிவு நிலுவையில் உள்ள நிலையில், சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை வெளியிடுவதில் பிரதமர் தலையிட்டு விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மீனவர்கள் விவகாரம்

நம் பாரம்பரிய மீன்பிடிப்பு முறையில் மீன்பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் துன்புறுத்துகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளில் அதிக அளவில் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் இந்த சம்பவம் நடைபெறுகிறது. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க கோரி பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் பல முறை வலியுறுத்தியும் இந்த சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

CMOTamilNadu ,MKStalin ,PMOIndia,NarendraModi

191 மீன்பிடிப் படகுகள், 145 மீனவர்கள் தற்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தற்போது இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவரது படகுகளையும் விடுவிக்க வேண்டும். அடுத்தமாதம் கொழும்புவில் நடக்க இருக்கும் இந்தியா இலங்கை இடையிலான கூட்டுக்குழு கூட்டத்தில், இதுதொடர்பாக விவாதித்து தீர்வு காணப்பட வேண்டும்.

பிரதமரின் தனிப்பட்ட தலையீட்டில் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உடனடி நடவடிக்கையாக, கைது செய்யப்பட்ட 145 மீனவர்களையும், அவர்களது படகுகளையும், மீன்பிடி உபகரணங்களுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது”

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement