ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு - டொனால்டு #Trump விடுவிப்பு!
ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2016ம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப்புடன், ரகசிய உறவு இருப்பதாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். இவ்விவகாரத்தை பேசாமல் இருக்க ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் வழங்கியதாக நடிகை ஸ்டார்மி தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு திரட்டப்பட்ட நிதியில் இருந்து டொனால்டு டிரம்ப் போலி வணிக பதிவுகளை உருவாக்கி 1,30,000 அமெரிக்க டாலர்களை ஸ்டோமி டெனியல்சுக்கு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, டிரம்பிற்கு எதிராக பண மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து டொனால்டு டிரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்ட போதிலும் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். டொனால்டு டிரம்ப் வரும் 20 ஆம் தேதி அதிபராக பதவி ஏற்கவுள்ள நிலையில் அவரை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீதிமன்றம் விடுவித்தது.