பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து - எஸ்.வி.சேகர் சரணடைய இடைக்கால விலக்கு!
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள 1 மாத சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பிரசன்னா.பி.வராலே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்,
“இந்த விவகாரத்தில் வரும் ஏப்.2ஆம் தேதி வரை சரணடைய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுவை முறையாக தாக்கல் செய்யும் வரை தான் சரணடைய விலக்கு அளிக்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை ஒரு முகநூல் பதிவை forward செய்தேன். அதனை உடனடியாக நீக்கவும் செய்து விட்டேன்.
நீதிபதி :-
நீங்கள் யார்? என்ன பணி செய்கிறீர்கள்?.
எஸ்.வி.சேகர் தரப்பு:-
தான் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நடிகர், எழுத்தாளர் என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி;
ஒரு பொது வாழ்க்கையில் இருப்பவர் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?.
எந்த விசயமாக இருந்தாலும் ஒரு நிதானத்துடன் செயல்பட்டிருக்க வேண்டாமா?.
ஒரு தகவலை பகிர்வதற்கு முன்னர் அதனை சரியாக பார்த்திருக்க வேண்டாமா?.
எஸ்.வி.சேகர் தரப்பு:-
தவறாக அப்படியே சமூக வலைதளத்தில் பகிர்ந்து விட்டேன். அதன் பின்னர் உடனடியாக நீக்கி விட்டேன்.
எஸ்.வி.சேகர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, அவர் சரணடைவதில் இருந்து இடைக்கால விளக்கு அளித்து உத்தரவிட்டார். 4 வார காலத்துக்கு சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.