திரிஷாவுக்கு எதிரான மான நஷ்ட வழக்கு: ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு கூடுதல் அவகாசம்!
நடிகை திரிஷா உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை செலுத்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை திரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இதையடுத்து தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி, அதுகுறித்து தெரிவிக்க வேண்டுமென டிசம்பர் 22ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், பெருந்தொகையான ஒரு லட்ச ரூபாய் அபராத தொகையை செலுத்துவதற்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஒருவரைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது அதன் மூலம் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, அபராத தொகையை செலுத்துவதற்கு மன்சூர் அலிகானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.