சபாநாயகர் #Appavu மீதான அவதூறு வழக்கு | வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
தமிழ்நாடு சட்டப் பேரவை சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கு செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று அப்பாவு பேசியது, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலா் ஆா்.எம்.பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றம் சம்மன் அனுப்பியும், அதை பேரவைத் தலைவா் பெற மறுத்துவிட்டதாக பாபு முருகவேல் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பேரவைத் தலைவா் தரப்பில், நீதிமன்றம் அனுப்பிய சம்மனை நிராகரிக்கவில்லை என்றும், நீதிமன்றம் தெரிவிக்கும் நாளில் ஆஜராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதியின் உத்தரவுபடி, இன்று காலை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக அப்பாவு நேரில் ஆஜரானார். இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கு செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.