“கவனத்திற்கு வந்த 3 மணி நேரத்தில் டீப் ஃபேக் வீடியோக்களை நீக்க வேண்டும்” - அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
தங்களின் கவனத்திற்கு வந்த 3 மணி நேரத்திற்குள்ளாக போலி, டீப் ஃபேக் வீடியோக்களை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது சமூக வலைதளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்களின் குரல் என்ற அமைப்பு சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
மேலும், டீப் பேஃக் வீடியோக்களை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும், சமூக வலைதளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது என்று தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனு மீது மே 06-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியது.
இதையும் படியுங்கள் : வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகன் - ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நவாஸ் கனி நோட்டீஸ்!
இந்நிலையில், தவறான தகவல்கள், உண்மைக்குப் புறம்பான விஷயங்கள், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ள டீப் ஃபேக் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளின் கவனத்திற்கு வந்த 3 மணி நேரத்திற்குள், சம்பந்தப்பட்ட டீப் ஃபேக் வீடியோக்களை அகற்ற வேண்டும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.