ரோஹித் வெமுலா வழக்கில் திடீர் திருப்பம் - மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு!
ரோஹித் வெமுலா உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மாணவராக இருந்த ரோஹித் வெமுலா(26), கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் பல்கலைக்கழக வளாகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டியலினச் சமூகப் பிரிவைச் சார்ந்தவராகக் கூறப்படும் ரோஹித் வெமுலா, மரணத்துக்கு முன் பல்கலைக்கழக வேந்தருக்கு எழுதியிருந்த கடிதத்தில் தனக்கு தொடர் அச்சுறுத்தல் வருவதாகவும், தன் மீது போலியான புகார்கள் சுமத்தப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, கல்வி நிறுவனங்களில் பட்டியலினச் சமூகத்தினர் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பல்கலைக்கழகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட சாதிக் கொடுமையால் தான் பட்டியலினச் சமூகப் பிரிவைச் சார்ந்தவராகக் கூறப்படும் ரோஹித் வெமுலா உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், இதையடுத்து, அவருக்கு ஆதரவாக அவரது மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டங்கள் பல நடத்தினர். இந்த வழக்கின் விசாரணை கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த நிலையில், கடந்த வெள்ளியன்று(மே. 3) தெலங்கானா காவல்துறை சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில், 2016இல் ரோஹித் வெமுலா உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது உறுதிபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பட்டியலினச் சமூகப் பிரிவை சார்ந்தவரல்ல என்பதும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ரோஹித் வெமுலா பட்டியலினத்தை சார்ந்தவரல்ல என்பது உண்மைக்கு புறம்பானது என்றும், விசாரணை அறிக்கையில் சந்தேகமிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள ரோஹித்தின் குடும்பத்தினர், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடப் போவதாக தெரிவித்துள்ளனர். ரோஹித் வெமுலா மரணம் தொடர்பாக தெலங்கானா காவல்துறையின் அறிக்கைக்கு எதிராக ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் சங்கம் போராட்டம் நடத்தியது.
இதனிடையே, இன்று(மே. 4) ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து மீண்டும் விசாரணை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து, இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதியளித்துள்ளார்.