டிசம்பர் மாதம் அப்பாக்களுக்கான மாதம் - நடிகர் நானி!
டிசம்பர் மாதம் அப்பாக்களுக்கான மாதம். ஏனெனில் என்னுடைய படமும் அப்பாக்களின் பாசத்தினை பற்றியது என ஹாய் நான்னா படத்தின் கதாநாயகன் நானி தெரிவித்துள்ளார்.
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. வழக்கமான தெலுங்கு மசாலா பாணியை தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை.
இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய் நான்னா’. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். இப்படத்தை வைரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. நானியின் 30வது படமான இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷௌர்யுவ் இயக்கியுள்ளார்.
நல்ல பொழுதுபோக்கான படங்களை தேர்வு செய்து நடிக்கும் நானியின் படங்களுக்கு தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புள்ளது. சமீபத்திய பட புரமோஷன் ஒன்றில் நடிகர் நானி, “டிசம்பர் மாதம் அப்பாக்களுக்கான மாதம். ஏனெனில் என்னுடைய படமும் அப்பாக்களின் பாசத்தினை பற்றியது. அனிமல் என்றொரு படம் வருகிறது. அந்தப் படமும் அப்பா பாசம் பற்றியது. இரண்டு படங்களும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” எனக் கூறினார்.