Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிச. 1-ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகம்!

09:51 PM Nov 23, 2023 IST | Web Editor
Advertisement

டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

"தற்போது தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு வருகையில் இரண்டு ஆவணங்களாக பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது அடிநிலம் பொருத்து பிரிபடாத பாகத்திற்கு கிரையமாக ஓர் ஆவணமாகவும் கட்டடப் பகுதியைப் பொருத்து கட்டுமான உடன்படிக்கையாக ஓர் ஆவணமாகவும் இரண்டு ஆவணங்களாக பதிவு செய்யப்படுகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்போது அடிநிலம் மற்றும் கட்டடம் சேர்ந்த பகுதிக்கு என ஒரே விலையே நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

கட்டடங்களை விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யாமல் கட்டுமான உடன்படிக்கை ஆவணமாகப் பதிவு செய்யும் வழக்கமும் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பரிவர்த்தனை இரண்டு வெவ்வேறு ஆவணங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. விற்பனை ஆவணத்திற்கு 7% முத்திரைத் தீர்வை மற்றும் 2% பதிவுக் கட்டணமும் கட்டுமான உடன்படிக்கை ஆவணங்களைப் பொருத்து 1% முத்திரைத் தீர்வை மற்றும் 3% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டைத் தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொருத்து கட்டடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த ஒரு கூட்டுமதிப்பு நிர்ணயிக்கப்பட்டு இம்மதிப்பானது மொத்த கட்டட பரப்பைப் பொருத்து கணக்கிடப்பட்டு அதனடிப்படையில் விற்பனை ஆவணமாகவே பதிவு செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களில் நிலவும் இம்முறையை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம் என முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இது குறித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் 27.07.2023, 07.09.2023 மற்றும் 12.09.2023 ஆகிய தேதிகளில் இப்பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற ரியல் எஸ்டேட் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டு மதிப்பு அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை ஆவணமாகப் பதிவு செய்ய தங்களின் இசைவினைத் தெரிவித்தனர். ஆனால் இவ்வகை ஆவணத்திற்கான முத்திரைத் தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நேர்வு தொடர்பாக பதிவுத்துறை தலைவரால் அனுப்பப்பட்ட முன்மொழிவு அரசால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளைப் பதியும்போது இனி பிரிபடாத பாக நிலத்திற்கு ஒரு தனி ஆவணம் கட்டடத்திற்கு ஒரு தனி ஆவணம் என இரு ஆவணங்களாகப் பதியப்படும் நிலையை மாற்றி கட்டடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்தவும் குறிப்பிட்ட மதிப்பு வரையிலான புதிய குடியிருப்புகள் பதிவிற்கான முத்திரைத் தீர்வையைக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

மதிப்பு ரூ.50 இலட்சம் வரையுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை தற்போது உள்ள 7% லிருந்து 4% ஆக குறைக்கலாம் என்றும் ரூ.50 இலட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை 7% லிருந்து 5% ஆக குறைக்கலாம் என்றும் அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரூ.50 லட்சம் வரையிலான மதிப்புடைய புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் விற்பனைக் கிரைய ஆவணம் பதியும்போது முத்திரைத் தீர்வை 4% மற்றும் பதிவுக் கட்டணம் 2% ஆக மொத்தம் 6% செலுத்தினால் போதுமானது.

ரூ.50 இலட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான மதிப்புடைய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் முத்திரைத் தீர்வை 5% மற்றும் பதிவுக் கட்டணம் 2% ஆக மொத்தம் 7% செலுத்தினால் போதுமானது. இந்த சலுகையானது பிரிபடாத பாக மனையுடன் பதியப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனைக்கு மட்டுமே இது பொருந்தும். மறு விற்பனைக்கு பொருந்தாது. இனிமேல் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் கட்டுமான ஒப்பந்த ஆவணமாக இல்லாமல் விற்பனை கிரைய ஆவணமாகப் பதிந்து தங்கள் குடியிருப்பை உடைமையாக்கிக் கொள்ளலாம்.

அடுக்குமாடி குடியிருப்புகளை அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட முத்திரைத் தீர்வை சலுகையுடன் பதியும் இப்புதிய நடைமுறை எதிர்வரும் 01.12.2023 முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கெனவே கட்டுமான ஒப்பந்த ஆவணமாகப் பதியப்பட்டிருக்கும் குடியிருப்புகளை மறு விற்பனை செய்வது தற்போது பதிவுத்துறையால் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அனுமதியானது, 01.12.2023க்குப் பின்னர் பதியப்படும் கட்டுமான ஒப்பந்த ஆவணங்களைப் பொருத்து விலக்கிக் கொள்ளப்படும்.

கூட்டு மதிப்பின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை சலுகை வழங்கும் அரசின் இந்த நடவடிக்கையால் வங்கியில் கடன் பெற்று புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் நடுத்தர மக்கள் மிகவும் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது" என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
ApartmentsFlatsNew RuleNews7Tamilnews7TamilUpdatesRegistrationRegistration ProcesstaxTNGovt
Advertisement
Next Article