அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்களின் மரணம்... விவேக் சைனியை தொடர்ந்து மேலும் ஒரு மாணவர் உயிரிழப்பு...
அமெரிக்காவில், பர்டியூ பல்கலைகழகத்தின் ஜான் மார்ட்டின்சன் ஹானர்ஸ் கல்லூரியில் படித்து வந்த இந்திய மாணவர் நீல் ஆச்சார்யா, ஞாயிற்றுகிழமை காணாமல் போன நிலையில் கல்லூரி வளாகத்தில் இறந்து கிடந்துள்ளார்.
அமெரிக்காவில் பயின்று வரும் இந்திய மாணவர்களின் இறப்பு தொடர்ந்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த நீல் ஆச்சார்யா, பர்டியூ பல்கலைகழகத்தின் ஜான் மார்ட்டின்சன் ஹானர்ஸ் கல்லூரியில் முதுநிலை கணினி அறிவியல் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், நீல் ஆச்சார்யாவின் தாய் கௌரி தனது மகன் ஞாயிற்றுகிழமையிலிருந்து காணவில்லை என்றும், அவரை பற்றி தகவல்கள் தெரிந்தால், எங்களுக்கு உதவுங்கள் எனவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், கடைசியாக தனது மகனை கார் ஓட்டுநர் கல்லூரி வளாகத்தில் பார்த்தாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், பல்கலைகழகத்தின் வளாகத்தில் மாணவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். பின்னர் அது நீல் ஆச்சார்யாதான் என பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கணினி துறையின் தலைவர் கிறிஸ் கிளிஃப்டன் கூறியுள்ளதாவது;
“எங்கள் மாணவர்களில் ஒருவர்களில் ஒருவரான நீல் ஆச்சார்யா இறந்துவிட்டார் என்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் மாணவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்த் வருகிறது.
ஏற்கனவே, இந்திய மாணவன் விவேக் சைனி அமெரிக்காவில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து நீல் ஆச்சார்யாவின் மரணமும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடதக்கது.