கண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 174-ஆக அதிகரிப்பு!
வயநாடு நிலச்சரிவில் குழந்தைகள் உட்பட சிக்கி 174 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 2வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 174-ஆக உயர்ந்துள்ளது.
நிலச்சரிவின் கோரத் தாண்டவத்தால், பசுமை நிறைந்த இந்தக் கிராமங்கள் புதைநிலம் போல் மாறின. மேலும் அந்த பகுதிகளுக்கு செல்லும் வழியில் உள்ள முக்கிய பாலமும் நிலச்சரிவில் சிக்கி உடைந்தது. இதனால் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது.
இறந்தவர்களின் உடல்கள் சகதியிலும் ஆறுகளிலும் கிடப்பதாகவும், சிலரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் , மீட்புக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் பலரின் சடலங்களும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அட்டமலை மற்றும் மற்றொரு கிராமமும் இந்த நிலச்சரிவால் தொடர்பு இன்றி துண்டிக்கப்பட்டுள்ளது.
வயநாட்டில் ஓடும் சாலியாற்றில் பலரது சடலங்களும் கரை ஒதுங்கி வருவது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது, மீட்பு படையினர் நேற்று இரவு முழுவதும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் அடித்து வரப்பட்ட 31 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டது.