குவைத் தீவிபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் - தமிழர்களின் நிலை என்ன?
குவைத் தீவிபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் - தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியிருந்தனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.
தீ விபத்தில் சிக்கிய நபர்கள் காப்பாற்றும் படி அவர்கள் சத்தம் போட்டனர். இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.
தமிழர்களின் நிலை என்ன?
தீவிபத்து ஏற்பட்ட குடியிருப்பில் தங்கி இருந்தாக கூறப்படும் தமிழகத்தை வீராச்சாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார் பிரசன்னா, சிவசங்கர் கோவிந்தன், கருப்பண்ணன் ராமு, பிராங்க்ளின் கலைச்செல்வன் ஜேம்ஸ், ரிச்சர்ட் ராய், முகமது ஷரீப் ஆகிய எட்டு பேரில் கருப்பண்ணன் ராமு, முகமது ஷரீப் என இருவரின் பெயர்கள் முதலில் வெளியிடப்பட்ட பலியானோர் பட்டியலில் இருந்தது குறிப்பித்தக்கது.
இதேபோல தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் பகுதியைச் சேர்ந்த மனோகர் என்பவரின் மகன் ரிச்சர்ட் ராய் அங்குள்ள கம்பெனியில் குவாலிட்டி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவரும் அந்த கட்டிடத்தில் தங்கி இருந்த நிலையில் அவருடைய நிலை என்ன என்பது குறித்து இதுவரை ஏதும் தெரியாததால் அவருடைய பெற்றோர்கள் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் தலையிட்டு தங்களது மகனை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சேர்ந்தவர் முகமது ஷெரிப் (35). இவர் கடந்த 12 ஆண்டுகளாக குவைத் நாட்டில் மங்காஃப் பகுதியில் உள்ள NBTC என்ற ஸ்டீல் கம்பெனியில் போர்மேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தங்கி வேலை செய்து வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள்.
இதனால் பதற்றம் அடைந்த இவரது குடும்பத்தினர் முகமது ஷெரிப் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது கடந்த பல மணி நேரமாக முகமது ஷெரிப் செல்போன் அழைப்பை எடுக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குவைத் நாட்டில் உள்ள சக தொழிலாளர்களை தொடர்பு கொண்ட போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். ஆனால் அது முகமது ஷெரிப் புகைப்படம் இல்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே மத்திய-மாநில அரசுகள் முகமது ஷெரிப் உடைய தற்போதைய நிலை என்ன என்பதை கண்டறிந்து தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கருப்பண்ணன் ராமு, வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி , முகம்மது ஷரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.