தம்பி மற்றும் அவரது மனைவியை வெட்டிக் கொன்ற அண்ணனுக்கு மரண தண்டனை விதிப்பு!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி . கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி பூவாத்தாள். இவர்களுடைய மகன்கள் வினோத்குமார் (25), கனகராஜ் (22), கார்த்திக் (19). இவர்கள் 3 பேரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆவர். கனகராஜ் அதே பகுதியில் உள்ள வெள்ளிப்பாளையம் சாலையில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்பவரை காதலித்து வந்தார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கனகராஜின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு தீபாவளி சமயத்தில் வீட்டை விட்டு வெளியேறிய இருவரையும் அழைத்த பேசிய இருவீட்டார் இருவரும் இளையோர் என
கூறி பிரித்து வைத்தனர்.
இதையடுத்து 2019ஆம் ஆண்டு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து, சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜின் சகோதரர் வினோத், வீடு புகுந்து கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியாவை வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். வர்ஷினி பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த ஆணவ படுகொலை சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்களான சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி விவேகானந்தன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தார்.
அத்துடன் வினோத்குமாருக்கான தண்டனை விவரம் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி திட்டமிட்டு ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து இளம்தம்பதியை வெட்டிக்கொன்றது நிரூபணம் ஆனதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலைக்கு சதித்திட்டம் தீட்டி கைது செய்யப்பட்ட சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.