தவெக மாவட்டச் செயலாளர் உயிரிழப்பு - விஜய் நேரில் அஞ்சலி?
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் சாஜி (எ) அந்தோணி சேவியர். இவர் சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது நண்பரை சந்திக்க நேற்று இரவு சென்றதாக தெரிகிறது. அப்போது நேற்று நள்ளிரவு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராற்விற்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த அக்கட்சியின் தலைவர் விஜய், “தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சஜி (எ) B.அந்தோணி சேவியர் காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. என் மீதும் கட்சியின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு கட்சிப் பணியாற்றி வந்தவர்.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்றார். மறைந்த மாவட்ட செயலாளர் அந்தோணி சேவியர் உடலுக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.