த.வெள்ளையன் மறைவு - முதலமைச்சர் #MKStalin இரங்கல்!
வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவராக இருந்தவர் த.வெள்ளையன். தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர்களை ஒருங்கிணைந்து அவர்களுக்காக சங்கம் அமைத்து வணிகர்களின் நலன்களுக்காக செயல்பட்டதில் த.வெள்ளையனுக்கு முக்கிய பங்கு உண்டு.
இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த 3ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 5 ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இது தொடர்பாக நேற்று அந்த மருத்துவமனையின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், த.வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிகப்பட்டதாகவும் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தது.
இந்த நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த த.வெள்ளையன் இன்று பிற்பகல் 2 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையனின் உடல் நாளை மறுநாள் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது சொந்த ஊரான திருச்செந்தூரை அடுத்த பிச்சிவிளை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் அவரது தந்தை கல்லறைக்கு அருகே அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் த.வெள்ளையன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது..
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.