DC vs MI | 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி!
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
17ஆவது ஐபிஎல் தொடரின் 43 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
டெல்லி அணியின் ஆட்டக்காரர்களாக ஜேக் பிரேசர் மெக்கர்க் – அபிஷேக் போரல் ஆகியோர் களமிறங்கினர். இதில் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய ஜேக் பிரேசர் 15 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் அரைசதம் விளாசி அசத்தினார்.
தொடர்ந்து ஆடிய ஜேக் பிரேசர் 27 பந்துகளில் 84 ரன்கள் (11 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ஆடிய அபிஷேக் போரல் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி 17 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் ரிஷப் பண்ட் , டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. ஸ்டப்ஸ் 48 ரன்களும், பண்ட் 29 ரன்களும் , எடுத்தனர். மும்பை அணி தரப்பில் பும்ரா, பியூஸ் சாவலா, முகமது நபி, லூக் வுட் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களத்தில் இறங்கியது.
தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோகித் சர்மா களமிறங்கினர். இஷான் கிஷன் 20 ரன்களும், ரோகித் சர்மா 8 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களும் சேர்த்தனர். தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். கடைசியில் டிம் டேவிட் அதிரடி காட்டி 17 பந்துகளில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் கடைசி வரை போராடிய திலக் வர்மா 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.