சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைபூச திருவிழா 2-ம் நாள் - அம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா!
தமிழ்நாட்டில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு
விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தைப்பூச திருவிழாவின் 2-ம் நாளான நேற்று (ஜன.17) கிராமத்து மண்டகப்படியில், அம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீப ஆராதனையும் காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மன் வீதி உலா சென்று, கோயிலில் உள்ள ஆசான மண்டபம் சென்றடைந்தார்.
தை மாதம் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தை தெப்ப தேரோட்ட திருவிழா 11
நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவில் முதல் 8 நாட்கள் சிம்ம
வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் என அனுதினமும் உற்சவ அம்மன் பல்வேறு
வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை!
இதனைத்தொடர்ந்து 9-ம் நாள் அம்மன் தெப்ப உற்சவம், 10-ம் நாள் அம்மன் கண்ணாடி பல்லக்கில் வழிநடை உபயம் கண்டருளி ஸ்ரீரங்கம் வடகரை கொள்ளிடம் ஆற்றில் சென்றடைகிறார். அன்று மாலை தீர்த்தவாரி கண்டருளும் அம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர்பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தைப்பூச திருவிழாவின் இறுதி நாளான 11-ம் நாள் உற்சவ அம்மன் கொள்ளிடம் ஆற்றில்
இருந்து புறப்பட்டு வழிநடை உபயம் மற்றும் மண்டகப்படி பூஜைகளை கண்டருளி
மூலஸ்தானம் சென்றடைகிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் கல்யாணி மேற்பார்வையில் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.