டேட்டிங் ஸ்கேம் | பெண் போல் பேசி மோசடி... ரூ.28 லட்சத்தை இழந்த இளைஞர்!
இணையம் வாயிலாக இளைஞரை தொடர்பு கொண்ட மர்ம கும்பல், போலியாக பெண் போல் பேசி அந்த இளைஞரிடம் இருந்து ரூ.28 லட்சத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியை இணையம் வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம கும்பல் போலியாக பெண்ணை போல பேசியுள்ளனர். தொடர்ந்து அந்த இளைஞரிடம் பேசிய அவர்கள் பல பொய்களை கூறி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடியின் மூலம் அந்த இளைஞர் ரூ.28 லட்சத்தை இழந்துள்ளார்.
இது மோசடி என அறிந்த அந்த இளைஞர் போலீசாரை நாடினார். அந்த மோசடி கும்பல் தெலுங்கானாவில் செயல்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் மோசடியில் ஈடுபட்ட ஒரு நபரின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மோசடியில் ஈடுபடும் நபர்கள் பெண்கள் பெயரில் போலியான முகவரியை தொடங்கி, டேட்டிங் இணையதளங்கள் மற்றும் செயலிகளில் நுழைகிறார்கள். பின்னர் அவர்கள் சரியான நபரை தேர்ந்தெடுத்து அவர்களுடன் தொடர்ந்து பேசி நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். மோசடியில் ஈடுபவர்கள் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் போல அவர்களை உணர்வுப்பூர்வமாக நம்ப வைக்கிறார்கள்.
இதுபோன்ற மோசடியில் சிக்காமல் இருக்க போலீசார் சில அறிவுரை வழங்கியுள்ளனர். அதன்படி, முகவரியில் இருக்கும் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிய பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன, அவற்றைப் பயன்படுத்தவும், ஆன்லைன் மூலம் பழகி பணம் கேட்கும் யாருக்கும் பணம் அனுப்ப வேண்டாம், ஒருவேளை யார் மீது சந்தேகம் வந்தாலும் உடனடியாக அவர்களுடன் பேசுவதை நிறுத்திவிடுங்கள், இதுபோன்ற டேட்டிங் ஸ்கேம்கள் உள்ளிட்ட புதிய மோசடிகள் குறித்து அறிந்துகொண்டு எச்சரிக்கையாக இருங்கள் என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.