4 ஆண்டுகளில் 47,000 புகார்கள் | பட்டியலின மக்களுக்கு எதிராக அதிகரித்த குற்றங்கள்!
தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 47,000 புகாா்கள் பதிவாகியுள்ளதாக தகவல் அறியும் சட்டம் (ஆா்டிஐ) மூலம் பெறப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய கொடுமைகள், நில விவகாரங்கள், அரசு பணிகள் சார்ந்த சிக்கல்கள் உள்ளிட்டவை முக்கிய விவகாரங்களாக இடம்பெற்றுள்ளதாக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2020-21ம் ஆண்டில் 11,917 புகார்களும், 2021-22ம் ஆண்டில் 13,964 புகார்களும் 2022-23ம் ஆண்டில் 12,402 புகார்களும் 2024ம் ஆண்டில் தற்போது வரை 9,550 புகார்களும் பெறப்பட்டுள்ளன.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆர்டிஐ மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு விளக்கமளித்து இந்த தரவுகளை என்சிஎஸ்சி பகிர்ந்துள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கான தேசிய உதவி எண் மூலம் 6,02,177 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் 3,10,623 புகார்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்தே பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : Siddha ,ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள் | அக்.17ம் கலந்தாய்வு
இதுதொடர்பாக என்சிஎஸ்சி தலைவர் கிஷோர் மக்வானா பிடிஐ நிறுவன செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள், நில விவகாரங்கள், அரசு பணி சார்ந்த சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து அதிக புகார்கள் பெறப்பட்டுள்ளன. இப்புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய அடுத்த மாதம் முதல் பட்டியலினத்தவருக்கான மாநில ஆணையங்களுக்கு நேரில் சென்று, மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை கண்காணிக்கவுள்ளோம். என்சிஎஸ்சி தலைவராக பதவியேற்றதில் இருந்து வாரம் நான்கு முறை மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.