குலசேகரன்பட்டினத்தில் களைகட்டிய #Dasara திருவிழா!
குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வட இந்தியாவில் நவராத்திரியின் 9வது நாளில் தசரா பண்டிகை கொண்டாடப்படும். கர்நாடக மாநிலம், மைசூரில் தசரா திருவிழா மிகவும் பிரசத்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3 ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவின்போது பக்தர்கள் வேடம் அணிந்து ஆடி பாடி காணிக்கை வசூல் செய்து கோயிலில் செலுத்துவது தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (அக்.12) நள்ளிரவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பக்தர்கள் காளி, அம்மன், ராஜா ராணி, குறவன் குறத்தி, அனுமன் உள்ளிட்ட வேடமணிந்து குழுவாகவும், தனியாகவும் வீடு வீடாக சென்று காணிக்கை பெற்றனர். தசரா திருவிழா நாளை நள்ளிரவுடன் நிறைவு பெறுவதையொட்டி பக்தர்கள் இரவு பகலாக ஆடி பாடி காணிக்கை வசூல் செய்தனர். அவர்களுக்கு இணையாக திரைப்பட நடன கலைஞர்களும் நடனமாடினர். இதனால் அப்பகுதிகளில் திருவிழா கோலம் களைகட்டியுள்ளது.