முறையான ஆவணங்கள் இல்லாததால் தர்கா யானை பறிமுதல் - பிரியாவிடை அளித்த கடையநல்லூர் மக்கள்!
தென்காசி மாவட்டத்தில் பள்ளிவாசலில் 22 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டுவந்த யானை, முறையான ஆவணங்கள் இல்லாததால் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அப்பகுதி மக்கள் யானைக்கு பிரியாவிடை அளித்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பெரிய பள்ளிவாசல் சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாகும். மேலும் பிற தர்காக்களில் இல்லாத சிறப்பம்சம் என்னவென்றால் இங்கு தர்காவுக்கு சொந்தமாக யானையும் உண்டு. இந்த தர்காவிற்கு அருகில் யா முஹம்மத் சமாதியும் வைக்கப்பட்டிருக்கும். இங்கு வந்து அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த பள்ளிவாசலில் கடந்த 22 ஆண்டுகளாக ஜெய்னி என்ற 58 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த யானைக்கு முறையான ஆவணங்களை காண்பிக்குமாறு வனத்துறையினர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தர்கா நிர்வாகத்திடம் கேட்டபோது நிர்வாகம் ஆவணங்களை புதுப்பிக்காமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தர்கா யானையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 22 ஆண்டுகளாக மக்களுடன் பழகி வந்த யானைக்கு கடையநல்லூர் மக்கள் ஒன்று கூடி பிரியாவிடை கொடுத்தனர்.