அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு!
பொன்முடியின் சர்ச்சைப் பேச்சு மற்றும் செந்தில் பாலாஜி மீதான வழக்கு காரணமாக இருவரும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் அந்த ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர். என். ரவி, அமைச்சரவை மாற்றத்துக்கும் ஒப்புதலை அளித்தார்.
இதனையடுத்து பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜி வகித்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெறுவார் என கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி, பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், முதலமைச்சர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சராக பொறுப்பேற்ற மனோ தங்கராஜுக்கு மீண்டும் பால்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.