தாதே சாகேப் பால்கே விருது : மோகன்லாலுக்கு பிரதமர் மோடி, பினராயி விஜயன் வாழ்த்து!
மலையாள நடிகர் மோகன்லாலுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வகையில் பிரதமர் மோடி நடிகர் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்தில்,
”மோகன்லால் திறமை மற்றும் நடிப்பு பன்முகத்தன்மையின் சின்னம். பல தசாப்த கால தனித்துவமான கலைப் பயணத்தின் மூலம், அவர் மலையாள சினிமா மற்றும் நாடகத்துறையில் ஒரு முக்கிய நபராக, கேரள கலாச்சாரத்தின் மீது ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் நிற்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். திரைப்படம் மற்றும் நாடக ஊடகங்களில் அவரது திறமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனைகள் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள வாழ்த்தில்,
”தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு வாழ்த்துக்கள். இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த அசாதாரண பங்களிப்புகளுக்கு இது உண்மையிலேயே தகுதியான அங்கீகாரம். இந்த பெருமைமிக்க தருணம் ஒவ்வொரு மலையாளிக்கும், நம் நாட்டிற்கும் மகிழ்ச்சியைத் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.