தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா: நடிகை நயன்தாராவுக்கு விருது!
2024-ம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார்.
அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியானது.
வெறும் 17 நாட்களில் 1000 கோடி இலக்கை எட்டியது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
This one at Dadasaheb Phalke International Film Festival Awards 2024 🏆 Best Actor Female~ JAWAN 👍 pic.twitter.com/LRPH5jbtFV
— Nayanthara✨ (@NayantharaU) February 20, 2024
இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வழங்கினார். இந்த விருது வழங்கும் விழாவில் மஞ்சள் நிற சேலையில் வருகை தந்திருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜவான் படத்துக்காக நடிகை நயன்தாரா பாராட்டுகளை பெற்று வரும் அதே நேரத்தில் அவருக்கு கிண்டலான பதிவுகளும் வெளியாகி வருகின்றன. காரணம் ஜவான் படத்தை அட்லி தனது அனைத்து தமிழ் படங்களின் கலவையாக கொடுத்துள்ளதாக படம் வெளியான சமயத்தில் விமர்சனம் எழுந்தது. இப்படியான படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது கொடுக்கலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.